Press enter to see results or esc to cancel.

ஜெயலலிதா பற்றி இலங்கை அவதூறு: நடிகர்கள்– டைரக்டர்கள் போராட்டம்




இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதை இழிவுபடுத்தும் வகையில் அவதூறு செய்தி வெளியானது. இது தமிழ்நாட்டு மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இலங்கைக்கு அனைத்து கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அ.தி.மு.க. வினர் தமிழகம் முழுவதும் இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவியை எரித்தனர். கறுப்புக்கொடி போராட்டங்களும் நடந்தது. தமிழ் திரையுலகினரும் இன்று போராட்டத்தில் குதித்தனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் எதிரில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகர் நடிகைகள் காலை 10.30 மணிக்கு திரண்டார்கள். இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் தலைமையில் டைரக்டர்களும் வந்தனர். பெப்சி தொழிலாளர்களும் கூடினார்கள். ஸ்டன்ட் நடிகர்கள், டான்ஸ் மாஸ்டர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்பட பலர் வந்தனர்.

அங்கு துணி பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் எல்லோரும் திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். நடிகர்கள் சிவகுமார், விஜய், சூர்யா, பிரபு, பாக்யராஜ், பார்த்திபன், ஜீவா, விக்ரம்பிரபு, விவேக், செந்தில், தம்பிராமையா, கருணாஸ், எஸ்.ஜே.சூர்யா, பாண்டியராஜன், மன்சூர்அலிகான், ஏ.ஆர்.முருகதாஸ், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, கேயார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம் வருமாறு:–

நடிகர்கள், ஜித்தன் ரமேஷ், வையாபுரி, சிவா, குண்டுகல்யாணம், தாமு, பட்டாபி அனுமோகன், மயில்சாமி, கே.ராஜன், தியாகு, பொன்வண்ணன், சந்தானபாரதி, நடிகை குயிலி, டைரக்டர்கள் லிங்குசாமி, மனோபாலா, டி.சிவா, ஆர்.வி.உதயகுமார், நாஞ்சில் பி.சி.அன்பழகன், களஞ்சியம், சித்ரா லட்சுமணன், ரமேஷ் கண்ணா, ரவிமரியா, சுந்தர ராஜன், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், பிரமிடு நடராஜன், ஜாக்குவார் தங்கம், பெப்சி விஜயன், கவிஞர் தாமரை, தியேட்டர் அதிபர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன்.

டிஜிட்டல் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன், சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ராஜேந்திரன். விஜய் மக்கள் இயக்க தலைவர் ஆனந்த். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்கள் அடங்கிய பேனர்கள் வைத்து இருந்தனர். தாயை வணங்கு பவன் தமிழன், தாயை பழிப்பவன் சிங்களவன், தாயை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடோம்.

பத்து கோடி தமிழர்களின் புறநானூற்று தாய் அம்மா. குரங்கு கையில் பூமாலை கோத்தபய கையில் இலங்கை, உலகாண்ட தமிழனை அழிக்க நினைக்காதே. ஆட்டம் போடும் சிங்களனே ஓட்டம் எடு இலங்கைக்கு என்பன போன்ற வாசகங்கள் அதில் இருந்தன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கைக்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பினார்கள்.