Press enter to see results or esc to cancel.

ரஜினியின் படத்தை வாங்கிய ஜிகர்தண்டா தயாரிப்பாளர்.






ரஜினி-ராதிகா நடிப்பில் 1982-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மூன்று முகம்’. இப்படத்தை சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. செந்தாமரை, மனோராமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஜெகநாதன் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் மூன்றுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரஜினிகாந்துக்கு அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது. தமிழ் ரசிகர்களால் மறக்கவே முடியாத இந்த படத்தை இந்தியிலும் ரீமேக் செய்தனர். அதிலும் ரஜினியே நடித்திருந்தார்.

இந்நிலையில், இந்த படத்தை தமிழில் மீண்டும் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்களிடையே கடும் போட்டி நிலவியது. தற்போது, இதன் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் கதிரேசன் வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ரஜினி படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்ற கனவு நனவாகி இருக்கிறது. மூன்று முகம் ஒரு மாஸ் ஹீரோவிற்கான படம். அஜித், விஜய், கார்த்தி போன்ற பெரிய நடிகர்களுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே, ரஜினி நடித்த ‘பில்லா’, ‘மாப்பிள்ளை’, ‘தில்லு முல்லு’ ஆகிய படங்கள் தமிழில் ரீமேக்காகி பெரும் வெற்றியடைந்தது. அந்த வரிசையில் ‘மூன்று முகம்’ படமும் வெற்றியடையும் என நம்பலாம்.

இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கும் கதிரேசன், சமீபத்தில் வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்ற ‘ஜிகர்தண்டா’ படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.