Press enter to see results or esc to cancel.

சர்ச்சைக்குரிய காட்சிகள்: சென்னை உயர்நீதிமன்றத்தில் திரையிடப்பட்ட துப்பாக்கி

இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கும் காட்சிகள் உள்ளனவா என்பது குறித்து ஆராய்வதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் துப்பாக்கி திரைப்படம் திரையிடப்பட்டது.

இது தொடர்பாக இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ. அப்துல் ரஹீம் மனு தாக்கல் செய்துள்ளார்.

இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தும் வகையில் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த திரைப்படத்துக்கு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் வழங்கிய யு சான்றிதழை வாபஸ் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ஆர். பானுமதி, கே.கே. சசிதரன் ஆகியோர் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளனவா என்பது பற்றி ஆராய்வதற்காக துப்பாக்கி படத்தை நீதிமன்றத்தில் திரையிட ஏற்பாடு செய்யுமாறு படத்தின் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கடந்த 10ம் திகதி பிற்பகல் துப்பாக்கி படம் திரையிடப்பட்டது.

நீதிபதிகள் ஆர். பானுமதி, கே.கே. சசிதரன், மனுதாரர் தரப்பு சட்டத்தரனிகள் சங்கரசுப்பு, ஏ. ரமேஷ், திரைப்படத் தயாரிப்பாளர் தரப்பு சட்டத்தரனி மகேஸ்வரி, அரசுத் தரப்பு சட்டத்தரனி ஐ.எஸ். இன்பதுரை மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட பலர் திரைப்படத்தைப் பார்த்தனர்.

சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து சட்டத்தரனி சங்கரசுப்பு நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

ஏற்கெனவே நீக்கம் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து தயாரிப்பாளர் தரப்பு சட்டத்தரனி மகேஸ்வரி நீதிபதிகளிடம் விளக்கினார்.