Press enter to see results or esc to cancel.

விஸ்வரூபம் தடையை நீக்கியது நீதிமன்றம்

உலக நாயகன் கமலஹாசன் இயக்கி நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம் படம் வருகிற 11ம் திகதி ரிலீசாகிறது.

இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி ரிஜண்ட் சாய் மீரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

கமல் மர்மயோகி படத்தை எடுக்க தங்களுடன் ஒப்பந்தம் போட்டதாகவும், அதற்குண்டான ரூ.10.5 கோடி கடனை அவர் திருப்பித் தரவில்லை.

எனவே விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பட நிறுவனத்தின் பங்குதாரர் சந்திரஹாசன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கனவே உன்னைப் போல் ஒருவன் படத்தை வெளியிட்டபோதும் பிரச்சினையை கிளப்பி வழக்கு தொடர்ந்தனர்.

அப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் ரூ.3.5 கோடி வங்கி உத்தரவாதம் அளிக்கப்பட்டது என்றும் சந்திரஹாசன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதே பிரச்சினைக்காக இன்னொரு வழக்கு தாக்கல் செய்து இருப்பது நீதிமன்றத்தை ஏமாற்றும் செயல் என்றும் மனுவில் கூறி இருந்தார்.

விஸ்வரூபம் படம் ரூ.90 கோடி செலவில் எடுக்கப்பட்டு உள்ளது. 3 மொழிகளில் படம் வெளியாகிறது என்றும் படத்துக்கு தடை விதித்தால் கமலுக்கும், படநிறுவனத்துக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டி இருந்தார்.

இதையடுத்து விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், படத்துக்கெதிரான மனுவையும் தள்ளுபடி செய்தார்.