Press enter to see results or esc to cancel.

பள்ளி பற்றி அவதூறு வசனம்: தனுசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

தனுஷ், அமலாபால் ஜோடியாக நடித்த ‘வேலை இல்லா பட்டதாரி’ படம் சமீபத்தில் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி பற்றி அவதூறு வசனம் இடம் பெற்றுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வேலை இல்லாமல் இருக்கும் தனுஷ் தனது தந்தையிடம் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படிக்க வைத்ததால் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்றும் புனித ஜான் பள்ளியில் தம்பியை படிக்க வைத்ததால் அவனுக்கு வேலை கிடைத்துள்ளது என்றும் பேசுவதுபோல் அந்த வசனம் இடம் பெற்றுள்ளது.

ராமகிருஷ்ணா பள்ளி நிர்வாகமும், முன்னாள் மாணவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். வசனத்தை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர். அத்துடன் தனுஷ் மீது வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரித்தனர். ஆனாலும் வசனம் நீக்கப்படவில்லை.

இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள தனுஷ் வீட்டில் தமிழ்நாடு இந்து மகாசபா சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி பற்றிய அவதூறு வசனத்தை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

சேலம் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம செயலாளர் சுவாமியதாத்மானந்தரும் தனுசுக்கு வசனத்தை நீக்கும்படி வற்புறுத்தி கடிதம் எழுதி உள்ளார். ராமகிருஷ்ணா மிஷன் கல்வி நிறுவனங்களில் 5 லட்சம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள் என்றும் குறிப்பிட்ட வசனம் பெரிய தீமையை விளைவிக்க கூடியது என்பதை படத்தின் இயக்குனரோ தணிக்கை குழு அதிகாரிகளோ அறியாமல் இருக்க முடியாது என்றும் எனவே அந்த வசனத்தை படத்தின் எல்லா பிரதிகளில் இருந்தும் நீக்க வேண்டும் என்றும் கடிதத்தில் அவர் கூறிப்பிட்டு உள்ளார்.

எதிர்ப்புகள் வலுத்து வருவதால் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்குவது குறித்து படக்குழுவினருடன் தனுஷ் ஆலோசித்து வருகிறார். ஓரிரு நாளில் இதற்கான முடிவை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.