Press enter to see results or esc to cancel.

180 கி.மீட்டர் வேகத்தில் பைக் ஓட்டிய அதர்வா!

பரதேசி படத்திற்குப் பிறகு இரும்பு குதிரை நடித்து வரும் படம் ‘இரும்பு குதிரை’. இதில் இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ‘7ஆம் அறிவு’ ஜானி, ராய் லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை யுவராஜ் போஸ் இயக்கியிருக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கேமராமேனாக ‘பீட்சா’ கோபி அமர்நாத் பணியாற்றிருக்கிறார்.

இப்படத்தின் ஆடியோ இன்று வெளியிடப்பட்டது. அதன்பிறகு படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் யுவராஜ் போஸ், அதர்வா, பிரியா ஆனந்த், ராய் லட்சுமி, பாடலாசிரியர் தாமரை, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறும்போது, பாண்டிச்சேரியில் நடந்த உண்மைச் சம்பவத்தை படமாக எடுத்துள்ளேன். பைக் ரேஸ் சூழலில் நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகியிருக்கிறேன். இப்படத்தில் பைக் ரேஸ் ஓட்டுபவராகவும் பைக் ஓட்டுவதற்காக பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிப்பவராகவும் அதர்வா நடித்திருக்கிறார். ஒரு பைக் ரேசர் உடல் எப்படி இருக்க வேண்டுமோ அதற்கேற்றார் போல் தன் உடல் அமைப்பை மாற்றிக் கொண்டார் அதர்வா.

இத்தாலியில் பைக்ரேஸ் நடப்பதுபோல் காட்சிகள் எடுத்தோம். அந்த காட்சி சிறப்பாக வந்திருக்கிறது. ஹாலிவுட் தரத்திற்கு ஏற்றார்போல் இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. மேலும், பிரியா ஆனந்த், ராய் லட்சுமி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜானி ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் என்று கூறினார்.

அதர்வா பேசும் போது, பரதேசி படத்திற்குப் பிறகு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனக்கு ஏற்றார் போல் இப்படம் அமைந்தது. இயக்குனர் யுவராஜ் இப்படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார். இப்படத்தின் மூலம் அதிவேக பைக் ஓட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. 8 கியர் உள்ள பைக்கை ஓட்டினேன். ஆனால் என்னால் 6 கியருக்கு மேல் ஓட்ட முடியவில்லை. 180 கி.மீ வேகம் வரை பைக்கை மிகவும் மகிழ்ச்சியாக ஓட்டினேன். மேலும் படம் மற்றும் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது என்றும் கூறினார்.

அதன்பின் பிரியா ஆனந்த், ராய் லட்சுமி பேசும்போது படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது என்று கூறினார்கள்.