Press enter to see results or esc to cancel.

'தமிழ் நாயகிகளை' உருவாக்கும் நடிகர் ஜான் விஜய்

கொலிவுட்டில் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்து பலரின் பாராட்டை பெற்று வருபவர் நடிகர் ஜான் விஜய்.

'ஓரம்போ' படத்தில் கொமெடி கலந்து வில்லத்தனத்தை காட்டி அசத்தியவர், 'மவுன குரு'வில் கெட்ட பொலிசாக வந்து மிரள வைத்தார்.

பின்பு 'தில்லாலங்கிடி', 'கலகலப்பு' என பல படங்களில் கொமெடி கலந்த வில்லனாக கலகலக்க வைத்தார்.

தற்போது கைவசம் ஏகப்பட்ட பெரிய வாய்ப்புகள் உள்ள போதும் மனிதர் சத்தமில்லாமல் ஒரு அசாதாரண வேலையில் பிஸியாகிவிட்டார்.

அது தமிழ் சினிமாவுக்கு தமிழை நன்கு பேசத் தெரிந்த கதாநாயகிகளை உருவாக்கித் தருவது. இதற்காகவே ''எச்2ஓ'' எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் ஜான் விஜய்.

முதல் முயற்சியிலேயே சிக்ஸர் அடிப்பது போல ஜான் விஜய்யின் இந்த முயற்சியில் 70 இளம் பெண்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் 15 பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்வானார்கள். அதிலிருந்து அட்டகாசமாக தமிழ் பேசும் நாயகிகளாக 5 பேர் வெளிவந்துள்ளனர்.

தெரிவான ஐந்து நாயகிகள் விபரம்:

சஞ்சனா, அஞ்சலி, கோபிகா ஷா, ரமா, பத்மா ஆகியோர்தான். இவர்களில் முதலிடத்தைப் பெற்று தமிழ் பேசும் கதாநாயகி என்ற டைட்டிலைப் பெற்றவர் சஞ்சனா.

இயக்குனர்கள் எஸ்பி முத்துராமன், வசந்த், எஸ் ஜே சூர்யா, பாலாஜி சக்திவேல், எஸ்எஸ் ஸ்டான்லி, பாலாஜி மோகன், சாந்தகுமார் மற்றும் நடிகை வடிவுக்கரசி நடுவர்களாக இருந்து இந்த 5 நாயகிகளையும் தெரிவு செய்தனர்.

முதலிடம் பிடித்த சஞ்சனாவுக்கு ஒரு மெகா லக்கி பரிசு அடித்திருக்கிறது. அது, இயக்குநர் பாலாஜி சக்திவேலின் அடுத்த படத்தில் நாயகி வாய்ப்பு

இவருக்கு மட்டுமல்ல, மற்ற 'தமிழ்ப் பேசும் நாயகிகள்' நால்வருக்கும் கூட பட வாய்ப்புகள் கைமேல் கிடைத்துள்ளன.

பெருமான் படம் இயக்கிய ராஜேஷ், தனது அடுத்த படத்தில் இந்த ஐந்து பேரையுமே ஆரம்பப் பாடலுக்கு ஆட வைக்கப் போகிறாராம். இவர்களுடன் இறுதிச் சுற்றில் கலந்து கொண்ட சிலருக்கும் வாய்ப்பு தரப் போகிறாராம்.

நடிகர் காதல் சுகுமார் தான் இயக்கும் முதல் படத்தில் அபிநயா மற்றும் சங்கீதாவுக்கு நாயகி வாய்ப்பு தருகிறார். இவர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்ற நாயகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தமிழ்ப் பேசும் நாயகி போட்டியில் பங்கேற்ற ஜோத்ஸனா என்ற பெண் அழகிய முக வடிவம் கொண்ட நாயகியாக தெரிவானார். அவருக்கும் திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இறுதிச் சுற்றில் பங்கேற்ற பதினைந்து நாயகிகளுடனும் பவர் ஸ்டார் மேடையில் ஆட்டம் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 5 நாயகிகளையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

மூத்த இயக்குனர் எஸ்பி முத்துராமன், வசந்த், எஸ்எஸ் ஸ்டான்லி, பாலாஜி மோகன், சாந்தகுமார் ஆகியோர் நிகழ்ச்சிக்கு வந்து தமிழ் பேசும் நாயகிகளை தெரிவு செய்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஜான் விஜய் பேசுகையில், தமிழில் திறமையான நடிகைகள் இருந்தாலும் அவர்கள் தமிழ் மொழியைப் பேசாமல் டப்பிங் குரலில் நடிப்பதால்தான் விருதுகள் கிடைக்காமல் போவதை அறிந்தேன்.

அதிலிருந்து இந்த புது முயற்சியில் இறங்கினேன். சினிமா கலைஞர்கள் எனக்கு உற்சாகமளித்துள்ளார்கள்.

இந்த முயற்சிக்கு தனது மனைவி மாதவி மற்றும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பாலாஜி மோகன் ஆகியோர் பக்கபலமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார் ஜான் விஜய்.