Press enter to see results or esc to cancel.

கோச்சடையானை வாங்க ஆர்வம் காட்டும் டிடிஎச்காரர்கள்.. அமைதி காக்கும் ரஜினி!

கமலின் விஸ்வரூபம் படம் தியேட்டரில் வெளியாகும் முன்பே டிடிஎச்சில் ஒளிபரப்பாவது உறுதியாகிவிட்டதால், அதே வழியில் மற்ற பெரிய படங்களையும் வெளியிடும் முயற்சி நடக்கிறது. முதல்கட்டமாக, பொங்கலுக்கு வரவிருக்கும் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியனை டிடிஎச்சில் வெளியிடத் தயாராகி வருகின்றனர்.

    அமீர் இயக்கத்தில் வெளியாகும் ஆதி பகவனையும் டிடிஎச்காரர்கள் கேட்டு வருகின்றனர்.
  
   இதையெல்லாம் விட முக்கியமானது, கோச்சடையான் படத்தை எப்படி வெளியிடுவார்கள் என்ற கேள்வி. இந்தப் படம் முழுக்க முழுக்க 3 டியில் தியேட்டர்களில் மட்டுமே பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

   பட்ஜெட்டும் பெரியது. போட்ட பணத்தை உடனே டிடிஎச் சிறந்த வழி என்பதால் நாட்டின் அனைத்து டிடிஎச் நிறுவனங்கள் மூலமும் கோச்சடையானை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

 ரஜினி படம் என்று வரும்போது, அனைத்து குடும்பங்களுமே முதல் நாள் முதல் காட்சி பார்க்க விரும்புவார்கள் என்பதால், கூடுதல் கட்டணத்துடன் இந்தப் படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்ப பேசி வருகின்றனர்.

 ஆனால் ரஜினி கொஞ்சம் அமைதியாக இருங்கள், பிறகு பேசுவோம் என்று கூறியுள்ளாராம்.

   திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு பாதகம் இல்லாத முடிவாக இருந்தால் மட்டுமே எதையும் பரிசீலிக்க முடியும் என்று ரஜினி திட்டவட்டமாகக் கூறியுள்ளாராம்.

  ஜனவரி 3-ம் தேதிக்குப் பிறகு இந்த விஷயத்தில் ஒரு தெளிவு பிறக்கும் என்று தெரிகிறது.

  பொங்கலுக்குள் 4 படங்கள் டிடிஎச்சில் வெளியாகப் போவதை நினைத்து தியேட்டர்காரர்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.